உலகளாவிய ரீதியில் சோகத்தை எற்படுத்திய மரணம்- யார் இந்த போப் பிரான்சிஸ்...!
கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸின்(Pope Francis) மறைவு உலகளாவிய ரீதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்க நம்பிக்கையாளர்களின் மதத் தலைவர் மட்டும் அல்ல அவர் ஒரு மிக முக்கியமான உலக அளவிலான மனித உரிமை, சமாதான தூதராகவும் பார்க்கப்படுகிறார்.
ஜோர்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், 2013-ஆம் ஆண்டு, போப் பெனடிக்ட் பதவியில் இருந்து விலகிய பிறகு அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர்.
வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம்
இதுவே வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாகவும் அமைந்தது.
மக்களின் போப் ஆண்டவராக விளங்கியவர் பிரான்சிஸ். இவர் இந்த பெயரை தேர்ந்தெடுத்ததிலேயே அவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார்.
தனது செல்வத்தைத் துறந்து ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த 13-ஆம் நூற்றாண்டின் மறைபொருள் அசிசியின் புனித பிரான்சிஸ் நினைவாக பிரான்சிஸ் என்ற பெயரைப் பெற்ற முதல் போப் இவராவார்.
போப் பிரான்சிஸ், பதவியில் வந்த போது சாதாரணத் தன்மையோடு வாழ்ந்து, கடவுளின் வழியில் மனிதர்களுடன் இணைந்து செயல்படுவதாக தீர்மானித்தார்.
அவர் ஒரே ஒரு வழியைக் காட்டினால் அது ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து செயல்படுவது தான். இதனால் அவருக்கு ஒரு பரிசுத்தமான, தரமான முறையில் உலகின் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.
போப் பிரான்சிஸ் ஒரு முற்போக்கு தலைவராக சின்னமாக இருக்கின்றார், அவரின் தத்துவம் மனித நேயம், சமாதானம் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியமைப்புகள் குறித்த அவரது கருத்துகள், சாதாரண மனிதர்களை உற்சாகப்படுத்தி, உலகெங்கும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. எனினும், அவர் கடந்து செல்லும் பாதை எப்போதும் சரியானதாக இல்லாது சில விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய பார்வைகள் புதிய தலைமுறை மீது தாக்கம் தருவதுடன், எத்தனை காலங்களையும் கடந்து மனித உரிமைகளையும் சமுதாய அமைதியையும் பராமரிப்பதற்கான வழிகாட்டியாகவும் இருக்கும். போப் பிரான்சிஸ் மிகவும் தாழ்மையான வாழ்க்கையை மேற்கொள்கிறார்.
ஓர் எளிய நபர்
அவர் "போப்பை விட சாதாரண மனிதராக இருக்க விரும்புகிறேன்" எனக் கூறி, உயர்ந்த பதவியில் இருந்தும், எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும், மற்றவர்களை பரிசுத்தமாகப் பார்க்கிறார்.
அவர் எந்தவொரு ஆடைகளும், புகழையும் ஆசைப்படவில்லை, அவரது அடிப்படை இலக்கு ஏழைகளுக்கு உதவி செய்வது தான். பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களுக்கு அவர் ஆதரவாக நின்றார்.
எனினும், அத்தகைய பாதிரியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மெதுவாக நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டையும் அவர் எதிர்கொண்டார்.
ஓர் எளிய நபராக இருந்தவர் போப் பிரான்சிஸ். சாதாரண அங்கிகளை அணிவதாகட்டும், ஆடம்பரமான அரண்மனைகளைத் தவிர்ப்பதாகட்டும், தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை தானே எடுப்பதாகட்டும், கணவரை இழந்த பெண்கள், கைதிகள் போன்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகட்டும் அவர் என்றுமே எளிமையை விரும்புபவராகவும், எளிய மக்களோடு நிற்பவராகவும் இருந்துள்ளார்.
சமூக ஊடகங்கள் முதல் ஆபாசம் வரையிலான பிரச்சினைகள் குறித்து இளைஞர்களுடன் உரையாடிய போப் அவர்.அதுமட்டுமல்ல, தனது உடல்நலம் குறித்து வெளிப்படையாகப் பேசியவர்.
2021-ல் அவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை நடந்தது. ஜூன் 2023-இல் குடலிறக்கம், மூச்சுக்குழாய் அழற்சி, முழங்கால் வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரண்டு நுரையீரல்களிலும் உள்ள மூச்சுக்குழாய்களில் ஏற்பட்ட அழற்சி காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி இருந்தது. போப் பிரான்சிஸ் தனது பதவியிலிருந்து விலகுவார் என மிக நீண்ட காலமாக ஊகங்கள் வெளிவந்தன.
எனினும், அதனை திட்டவட்டமாக மறுத்தவர் போப் பிரான்சிஸ். போப்பாண்டவர் பதவி செய்வது "சாதாரண விஷயமாக" மாறக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
கைதிகளின் பாதங்களை முத்தமிட்ட போப்
வாட்டிகனில் தனது முதல் ஈஸ்டருக்கு முன்பு, ரோம் சிறையில் கைதிகளின் பாதங்களை அவர் கழுவி முத்தமிட்டார். போப் பிரான்சிஸ் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்காக, இத்தாலிய தீவான லம்பேடுசாவைத் தேர்ந்தெடுத்தார்.
இதற்குக் காரணம், ஐரோப்பாவுக்குள் நுழைய விரும்பும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு அந்த தீவுதான் நுழைவு வாயிலாக இருந்தது. உலகின் அலட்சியத்தையும் அதன் விளைவுகளையும் உணர்த்தவே அவர் இந்த தீவுக்குச் சென்றார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் மெக்சிகோவுக்கு எதிராக எல்லைச் சுவரைக் கட்ட அவர் திட்டமிட்டார்.
இது கிறிஸ்தவத்துக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தவர் போப் பிரான்சிஸ். மேலும், அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் வரலாற்று நல்லிணக்கத்தை எளிதாக்க உதவினார்.
2018-ஆம் ஆண்டு பிஷப்புகளை நியமிப்பது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த அவர் முயன்றார்.
தன்பாலின ஈர்ப்பாளர் கத்தோலிக்கர்கள் விஷயத்தில், "தீர்ப்பளிக்க நான் யார்?" என்று கூறிய போப் அவர். விவாகரத்து பெற்ற மற்றும் மறுமணம் செய்து கொண்ட விசுவாசிகள் மத்தியில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
திருநங்கை விசுவாசிகளின் ஞானஸ்நானத்தை அங்கீகரித்துள்ளார்.
கத்தோலிக்க படிநிலையின் முக்கிய நீரோட்டத்தில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க அவர் வழிவகுத்தார். அவரின் இறப்பிற்கு முதல் நாளான நேற்றையதினம் ஈஸ்டர் செய்தியையும் பதிவிட்டுள்ளார்.
உலக அமைதியை வலியறுத்திய அவரது உரையில், காசாவின்(Gaza) நிலைமை பரிதாபகரமானது. பசியால் வாடும் மக்களுக்கு உதவ நாம் முன்வர வேண்டும்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் துன்பப்படும் மக்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காசா எல்லையில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என முறையிடுவதாகவும், பிணைக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்று சேர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
88 வயதான போப், சுவாசக் கோளாறு காரணமாக பெப்ரவரி 14ஆம் திகதி மருத்துவமனைக்குச் சென்ற அவர், 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வத்திக்கானுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
