முல்லைத்தீவு வீதியொன்றின் மோசமான நிலை : கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்
முல்லைத்தீவு (Mullaitivu) முள்ளியவளையில் உள்ள ஒரு வீதியின் மோசமான நிலை தொடர்பில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாது இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அபிவிருத்தி நோக்கி முன்னகர்ந்து வரும் முள்ளியவளையில் உள்ள வீதிகள் பலவும் புனரமைக்கப்பட்டு வரும் வேளையில் இந்த வீதி மட்டும் நீண்ட காலமாக புனரமைக்கப்படாது இருக்கின்றது.
பிரதேசமொன்றின் அபிவிருத்தி அதன் வீதிகளின் புனரமைப்பிலும் தங்கியுள்ளது என நகரமும் அபிவிருத்தியும் தொடர்பில் கருத்துரைத்த துறைசார் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதியின் நிலை
ஒரு கிலோமீற்றர் நீளமான இந்த வீதியின் 50 மீற்றர் தூரமான பகுதி மட்டும் கொங்கிறீற்று வீதியாக அமைக்கப்பட்டு மீதமுள்ள பகுதி எந்த புனரமைப்பும் செய்யப்படாது இன்று வரை இருக்கின்றது.
வீதியின் தரை கிரவல் கூட இடப்படாது இயற்கையான தரையோடு வீதியாக இருந்து வருகின்றது.வீதியாக பயன்படுத்த ஆரம்பித்த நாள் முதல் இந்த வீதி இப்படியே இருந்து வருவதாக அந்த வீதியின் அருகே வசித்து வரும் வயோதிபர் ஒருவருடன் உரையாடிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதியின் ஒரு பகுதி மேடாகவும் மற்றொரு பகுதி சாய்வான நிலமாகவும் இருப்பதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் சாய்வான நிலத்தில் உள்ள வீதியின் பகுதிகள் அரிக்கப்பட்டு வருகின்றது.
வீதியின் ஓரங்களில் வாழும் மக்கள் கழிவாக பெறப்படும் சீமெந்துக் கற்களையும் ஏனைய கற்களையும் வீதியில் அரிக்கப்பட்டு கிடங்காக இருக்கும் இடங்களில் பரவி தொடர்ந்து அரிப்படைவதை தடுக்க முயற்சி செய்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
வீதியின் பயன்பாடு
முள்ளியவளை சுனாமி நினைவாலயச் சந்தியில் காட்ட விநாயகர் ஆலயத்திற்கு செல்லும் வீதியையும் தண்ணீரூற்று புளியங்குளம் வீதியையும் இணைக்கும் முதலாவது வீதியாக இந்த வீதி இருக்கின்றது.
முள்ளியவளையில் இருந்து தண்ணீரூற்று மற்றும் மாமூலை கிராமங்களை இணைக்கும் பாதைகளில் ஒன்றாகவும் இந்தப் பாதை இருந்து வருகின்றது.
மரமுந்திரிகைச் செய்கை நிலங்களுக்கு செல்லக்கூடிய குறுகிய தூரப் பாதையாக இந்த வீதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்திலெடுக்கப்படுமா புனரமைப்பு
முள்ளியவளையில் உள்ள இந்த வீதியின் புனரமைப்பு தொடர்பில் உரிய தரப்புக்கள் கவனமெடுக்குமா? என்ற கேள்வியினை முள்ளியவளை வாழ் சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.
தொடர்ந்து வரும் அபிவிருத்தித் திட்டமிட்டல்களின் போது இந்த வீதியின் புனரமைப்பு தொடர்பிலும் கருத்தில் எடுக்கப்படுதல் வேண்டும்.
பாதை ஒரு முறை கூட புனரமைக்கப்படாத நிலையினை சுட்டிக் காட்டும் மக்களின் கோரிக்கையையும் இங்கே உரிய தரப்புக்கள் கருத்தில் எடுக்க வேண்டும்.
மேலும், அபிவிருத்தியின் ஒட்டுமொத்த செயற்பாடும் முள்ளியவளையினை ஆரோக்கியமான நகராக மாற்றியமைக்கும் என்பதால் இந்த வீதியின் புனரமைப்பு அவசியமானதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |