தமிழர் பிரதேசத்தின் நோயாளர் காவு வண்டியின் மோசமான நிலை
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பயன்பாட்டில் உள்ள நோயாளர் காவு வண்டி (Ambulance ) ஒன்றின் மோசமான நிலை தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவர் தனது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளார்.
வெளித்தோற்றத்தில் நல்ல நிலையில் இருப்பது போன்ற எண்ணத்தை அது தந்த போதும் அதனுள் மோசமான நிலையில் உபகரணங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புக்கள் இருக்கின்றன என குற்றம் சுமத்தியுள்ளார்.
இரும்பாலான பாகங்கள் துருப்பிடித்து உள்ளன. இரும்புத் துருவின் மணம் நோயாளர் காவு வண்டியின் உள்ளே இருப்பவர்களின் சுவாசத்திற்கு அசௌகரியமாக இருக்கின்றது என தன் பயண அனுபவத்தில் இருந்து குறிப்பிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.
வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது அவை குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டும். அத்தகைய நடை முறை மாஞ்சோலை வைத்தியசாலையில் இல்லையா என்ற கேள்வியும் இதன் மூலம் எழுப்பப்படுகிறது.
மோசமான நிலையில் பொருட்கள்
நோயாளர் காவு வண்டியினுள் இருக்கும் நோயாளரை பராமரிக்கத் தேவையான உபகரணங்கள் சீராக பராமரிக்கப்படவில்லை.
சில மருத்துவ உபகரணங்களில் அதிகளவில் தூசு படிந்திருந்ததோடு காவு வண்டியின் உட்புற தோற்றம் அழுக்கு படிந்த நிலையில் பார்வைக்கு உகந்தாக இருக்கவில்லை.
நோயாளர் காவு வண்டியினுள் இலத்திரனியல் உபகரணங்களை பொருத்தியிருக்கும் சட்டங்களில் இரும்புத்துரு அதிகமாக இருப்பதோடு சில இடங்களில் துளைகள் ஏற்பட்டுள்ளதையும் சமூக ஆர்வலர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நோயாளர் காவு வண்டியினை உரிய முறையில் பராமரித்துக் கொள்ளததால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.நோயாளர்களை காவிச் செல்லும் போது அவர்களை அசௌகரியப்படுத்தும் வகையில் காவு வண்டி இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பயண அனுபவம்
இந்த நோயாளர் காவு வண்டியில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயணம் செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்திருந்தது.
அந்த பயணத்தின் போது குளிரூட்டப்பட்ட நிலையில் பயணிக்க வேண்டிய அந்த நோயாளர் காவு வண்டியினுள் குளிரூட்டப்படாத சூழலில் பயணித்திருந்தேன்.
குளிரூட்டப்பட்ட நிலையில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த நோயாளர் காவு வண்டியினுள் நோயாளர் இருக்கும் பகுதியினை இப்போது குளிரூட்ட முடியவில்லை என சாரதி கூறியிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
போதிய காற்றோட்டம் இல்லாத நிலையில் இரும்புத்துரு மணத்தோடு பயணிக்க நேர்ந்தது சகித்துக்கொள்ள முடியாத ஒரு நினைவினை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஆர்வலர்களின் ஆதங்கம்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு சென்று வரும் தேவை அடிக்கடி ஏற்படும் ஒரு சூழலில் அதற்காக பயன்படுத்தப்படும் நோயாளர் காவு வண்டிகளை சரியான முறையில் பராமரித்து கொள்ள முடியாதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இருக்கும் பொருட்களை பராமரித்து பயன்படுத்தி வரும் போது அவற்றின் பயனை உச்சளவுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
ஆயினும் மாவட்ட வைத்தியசாலையான மாஞ்சோலை வைத்தியசாலையில் ஒரு நோயாளர் காவு வண்டியின் பயன அனுபவம் சுகதேகியான ஒருவரின் உடலையும் உள்ளத்தையும் அசாதாரண நிலைக்கு மாற்றிவிடக்கூடியதாக இருப்பது கவலைக்குரிய விடயம்.
துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் கவனமெடுத்து பொருத்தமான மாற்றங்களைச் ஏற்படுத்த வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |