குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வு! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இன்று(14.07.2023) பொங்கல் நிகழ்வு ஒன்றை செய்யவுள்ளதாகவும் அனைவரும் அணிதிரளுமாறும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களில் அழைப்பு விடுத்திருந்தார்.
இதன் பின்னணியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் (12.07.2023) முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றம் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிரான துண்டுபிரசுரங்கள் முல்லைத்தீவு,தண்ணீரூற்று, மற்றும் முள்ளியவளை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
துண்டுபிரசுரம் விவகாரம்
அண்மையில் குருந்தூர் மலை விவகாரத்தில் அதன் உரிமை மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிராக ஒருசிலர் செயற்பட்டுள்ளமையினை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்கள் இராணுவ புலனாய்வாளர்களின் பின்னணியில் செயற்படுகின்றார்களா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (12) முல்லைத்தீவு,தண்ணீரூற்று மற்றும் முள்ளியவளை பகுதிகளில் ஒட்டப்பட்ட துண்டு பிரசுரங்களில் இந்து மற்றும் பௌத்த மத நல்லிணக்கத்தினை குலைக்க துரைராசா ரவிகரன் பீற்றர் இளஞ்செழியன் வெளிநாட்டில் இருந்து பணத்தினை பெற்றுக்கொண்டு தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள் மக்கள் சிந்தித்து செயற்படவும் என்று எழுதப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதன் பின்னணியில் நேற்று முன்தினம்(12) முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றம் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பின்னர் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், குறித்த செயற்பாடானது வெலிஓயா சப்புமல்தன்ன விகாரை ,மற்றும் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரை ஆகியவற்றின் விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் அவரோடு இணைந்து செயற்படும் புலனாய்வாளர்கள் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களால் இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அங்கு இன முறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து நீதிமன்ற கட்டளைகளை மீறி அங்கு விகாரை கட்டுமான பணிகளை முன்னின்று செயற்படுத்திய வெலிஓயா சப்புமல்தன்ன விகாரை மற்றும் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரை ஆகியவற்றின் விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் கடந்த 11 ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் மூவரின் பெயர்களையும் குறிப்பிட்டு முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் மயூரன் மற்றும் நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகிய மூவருக்கு எதிராக இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூஜைகள் நடைபெறும்
இந்நிலையில் கல்கமுவ சாந்தபோதி தேரர், முகநூலில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சார்ந்த தமிழ்த் தீவிரவாதிகள் மற்றும் இந்துக் குருமார்களையும் இணைத்து மிகப்பெரிய பூஜை ஒன்றை நடத்தி ஆலயம் ஒன்றை நிறுவ இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு எதிராக இன்று(14) சிங்கள மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று முன்தினம் (12) துரைராசா ரவிகரன் பிறிதொரு தேவைக்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்றபோது அவரை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்று (14.07.2023) பூஜைகள் நடைபெறும் என ரவிகரன் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.




