சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற தமிழ்க் கல்விச்சேவை - தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையும் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடாத்திய மாபெரும் தைப்பொங்கல் விழா, கடந்த சனிக்கிழமை (17.01.2026) பாசல் மாநிலத்தில் முற்றென்ஸ் நகரில் நடைபெற்றது.
காலை 9:00 மணிக்குப் பொங்கல் பொங்கும் நிகழ்வுடன் தொடங்கிய இவ்விழாவில் தமிழர் பண்பாடு சார்ந்த இசை, நடன நிகழ்வுகளுடன் மொழி பண்பாட்டு நிறுவன மாணவர்களின் சிறப்பு நிகழ்வும் மேலும் பல சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக வருகைதந்த கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் சபேசன் சிதம்பரநாதனின் சிறப்புரையும், அவர் தலைமையில் இளையோர் கலந்துகொண்ட கருத்தாடல் நிகழ்வும் அரங்கில் இடம்பெற்றன.
பல நிகழ்வுகள்
இளையோரை ஊக்குவித்து, அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவதாகவும் இளந்தலைமுறை பெற்றோர் தமது பிள்ளைகளின் வாழ்வு சிறக்க மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பற்றியதாகவும் இது அமைந்திருந்தது. சுவிற்சர்லாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளையோர் இக்கருத்தாடலில் பங்குபற்றியிருந்தனர்.

இவர்கள் தமது பட்டறிவுகளையும் எதிர்கால இலக்குகளையும் பகிர்ந்துகொண்ட பாங்கும் அவர்களுடைய தமிழ்மொழிப் புலமையும் தனித்தன்மையான ஆற்றல்களும் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தன.
அவர்கள் எல்லோரும் தமது இன்றைய உயர்வுக்கு அத்திவாரமிட்ட பெற்றோருக்கும் வழிகாட்டிகளாக இருந்த புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினருக்கும் நன்றி கூறி மகிழ்வடைந்தனர்.
தைப்பொங்கல் விழாவில் சுவிற்சர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் இரண்டாவது துணைத்தலைவருமான செல்வி பராக் றூமியும் மாநில தமிழ் அரசியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விருது வழங்கி வைப்பு
இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக பிரித்தானிய மன்னரின் அதி உயர் விருதுகளுள் ஒன்றான OBE எனும் Officer of the British Empire விருதினைப்பெற்ற முனைவர் சபேசனுக்கு 'அறிவியல் - தொழில்நுட்ப வாழ்நாள் சாதனையாளர்" (“Lifetime Excellence in Science and Technology") எனும் உயரிய விருதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தகைசால் வாழ்நாட் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்திற்கு "தமிழர் வரலாற்றுக்கும் பாரம்பரிய பண்பாட்டு மரபுரிமைக்கும் சிறப்புப் பங்களிப்புக்கான விருது" ("Award for Outstanding Contribution to Tamil History and Heritage") என்னும் உயரிய விருதும் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் சார்பிலும் சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கத்தின் சார்பிலும் மொழி பண்பாட்டு நிறுவகத்தின் சார்பிலும் சுவிற்சர்லாந்து தமிழ் மக்கள் சார்பிலும் வழங்கி மதிப்பளிக்கப்பெற்றது.

அதேநேரம், 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்க்கல்விச்சேவையின் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் தைப்பொங்கல் விழாவையொட்டி நடாத்தப்பெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு ஆதிலட்சுமி சிவகுமாரின் முட்காட்டுப்பு, தமிழ்மணி ரதி கமலநாதனின் தொடுவானம் தூரமில்லை, குளோரியா றூபா அன்ரனின் பாரதியும் நானும் ஆகிய மூன்று நூல்கள் அரங்கில் அறிமுகஞ்செய்து வைக்கப்பெற்றன.
தமிழர் பண்பாட்டைப் பேணி, தைமாத்தை தமிழர் மரபுரிமை மாதமாகச் சுவிற்சர்லாந்தில் அறிவிப்பதற்கு ஏற்ற ஏதுநிலைகளை உருவாக்கும் நோக்கத்தோடு நடாத்தப்பெற்ற இவ்விழா சிறப்புற நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்நிகழ்வானது, Lankasri,Tamilwin, IBC Tamil ஆகிய நிறுவனங்களின் பிரதான ஊடக அனுசரணையுடன் இடம்பெற்றது.













