இலங்கையை உலுக்கிய கோர விபத்து! பேருந்தில் பயணித்த நபரின் திகில் அனுபவம் (Photos)
பொலன்னறுவை - மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விபத்திலிருந்து உயிர் தப்பிய இளைஞரொருவர் விபத்து தொடர்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதிவேகத்தில் பயணித்த பேருந்து
அவர் கூறுகையில், கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி சென்ற பேருந்தில் நாங்கள் பயணித்தோம். பேருந்தில் 50 பேர் வரையிலானோர் இருந்தனர்.
சுமார் பத்து பேர் பேருந்தில் நின்றுகொண்டு பயணித்தனர். 7.30 மணியளவில் பேருந்து பயணம் ஆரம்பமானதுடன் பேருந்து வேகமாகவே பயணித்தது.
விபத்து இடம்பெற்ற பாலத்திற்கு அருகில் வந்த போது பேருந்தின் இயக்கம் திடீரென நிறுத்தப்பட்டது. அத்துடன் பேருந்து பாலத்திலிருந்து நீருக்குள் விழுந்தது. நான் ஜன்னல் ஓரத்திலேயே அமர்ந்திருந்தேன்.
இந்த நிலையில் நான் தான் முதலில் வெளியில் வந்தேன். சுமார் 5 முதல் 10 நிமிடங்களில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பலர் சுயநினைவின்றி இருந்தனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும், 3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் 10 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், ஒருவரது சடலம் மனம்பிடிய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த நிலையில் 40க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த பேருந்திற்கு பயணிகள் போக்குவரத்துக்கான முறையான உரிமம் இல்லை என்றும் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |