கள்ளக்குறிச்சியில் உயிரிழப்புக்களுக்கு மத்தியில் அரசியல் : தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி
கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மதுபான உயிரிழப்புக்களுக்கு மத்தியில் அரசியலும் தீவிரமாகியுள்ளது.
இதன்போது குறித்த இடத்திற்கு மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக அங்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னணி குறித்த தகவல்
முன்னதாக பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்கள், உதயநிதி, மா சுப்பிரமணியன், வேலு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக தலைவர் வைகோ, பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் உட்பட்ட பலரும் சென்று சந்தித்தனர்.
இந்தநிலையில் நேற்று(21) நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகன் கருணாபுரத்தில் பலியானவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றார்.
இந்த வேளையில் அங்கிருந்த சிலர் சாட்டை துரைமுருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் ஒருவர் திடீரென்று பாய்ந்து சாட்டை துரைமுருகனை தாக்கியதனையடுத்து உடனடியாகவே அவர் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டார். இதற்கிடையில் இந்த தாக்குதலின் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சட்டவிரோத மதுபான விவகாரம் தொடர்பாக சாட்டை துரைமுருகன் தனது வலையொளி தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் .
எனவே இந்த காணொளி காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |