பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும் பொலிஸாரும் உதவி : கம்மன்பில பகிரங்க குற்றச்சாட்டு
எமது நாட்டில் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அதற்கு நிச்சயம் அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் ஆதரவுகள் இருந்தே தீரும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
'நாட்டில் துப்பாக்கிச்சூடுகள், கொலைகள் அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,"உயர் பொலிஸ் அதிகாரியுடன் இது பற்றி பேசினேன். கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்களை கட்டுப்படுத்துவதிலேயே பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.
இதனால் பாதாள குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை சேகரிக்க முடியாமல் போனது. இதனால் அவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
போதைப்பொருள் வர்த்தகம்
இப்போது நாட்டில் அந்த ஆர்ப்பாட்டங்கள் போன்ற நிலைமை இல்லை. இதனால் பாதாளக் குழுக்களை அடக்குவதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ளோம் என்று அந்த அதிகாரி கூறினார்.
அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் ஆதரவு இல்லாமல் ஒருபோதும் போதைப்பொருள் வர்த்தகம் செய்யவோ பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியாது என்பது சர்வதேசமே ஏற்றுக்கொண்ட உண்மை.
அதேபோன்று, எமது நாட்டில் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அதற்கு நிச்சயம் அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் ஆதரவுகள் - உதவிகள் இருந்தே தீரும்."என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |