மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்பவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் - பிள்ளையான்
இந்த நாட்டின் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் கொள்கையினை தோற்றுப்போன கொள்கையாகக் காட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த முயற்சிகளை ஒருபோதும் வெற்றியளிக்கவிடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் நடந்துகொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவ்வாறான செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சந்திரகாந்தன் எம்.பி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபிட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் செழுமைமிக்க 100 நகரை அழகுபடுத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஊறணி சந்தியிலிருந்து திருப்பெருந்துறை வரையான ஒரு கிலோமீற்றர் தூர நடைபாதை அமைக்கப்படவுள்ளதுடன் ஊறணி சந்தியும் அழகுபடுத்தப்படவுள்ளது. நகர அபிவிருத்தி, கழிவுப்பொருள் வெளியேற்றம், துப்புரவு ஏற்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சின் கீழ் சுமார் 18மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாநகரசபையிடம் இதன் பணிகள் நிறைவுபெற்றதும் கையளிக்கப்படவுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, கோவிட் காரணமாக மக்களுக்குப் பஞ்சம் இருக்கின்றபோது ஏன் நகர அபிவிருத்தி திட்டத்தில் இதனை ஆரம்பிக்கின்றீர்கள் என்ற விமர்சனங்கள்கூட வந்திருக்கின்றன.
சுபிட்சத்தின் நோக்கு என்ற ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு ஒரு அரசாங்கம் என்ற அடிப்படையிலே எங்களுக்கு இருக்கின்றது.
அதனை நிறைவேற்றும் நோக்கத்தில் நாங்களும் அதிகாரிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்கு கோவிட் தடையாக இருக்காது என நாங்கள் நம்புகின்றோம். எங்களை விமர்சிப்பவர்களும் குற்றஞ்சாட்டுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அரசியலிலே எதிர்க்கட்சிகள் எங்களை விமர்சிக்க முடியும். நூறு நகரங்கள் திட்டத்திலே மட்டக்களப்பில் இரண்டு நகரங்களும் சுபிட்சத்தின் நோக்கு திட்டத்திலே பல கிராமங்கள், பல நீர்ப்பாசனத் திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை வைத்து பெரிதாகப் பேசப்படுகின்றது. உண்மையில் நானும் சிறைச்சாலையிலிருந்தவன் என்ற அடிப்படையில் அவர்களின் உள்ளக் குமுறலை அறிவேன்.
அந்தவகையில் சிறைச்சாலைக்குரிய ஒரு அமைச்சர் சென்று அவ்வாறான அசம்பாவிதத்தை நடத்தியிருந்தால் அது மிகப் பெரிய பிழை.
கண்டிக்கப்பட வேண்டிய விடயம். நாங்களும் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆனால் எங்களில் சிலரின் நிலைப்பாடு என்னவென்றால் நாங்கள் இவற்றைக் கண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றோம் என்று. நிச்சயமாக அரசாங்கம் அவ்வாறு இராது. அதற்கான விசாரணை நடக்கின்றது. அமைச்சர் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். நிச்சயமாக அந்த விசாரணை சரியாக இடம்பெறும்.
இந்த விடயத்தை நாங்களும் வன்மையாக எதிர்க்கின்றோம். அரசாங்கத்துக்குள் இருந்து எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம். ஆகையால் அந்த ஒரு விடயத்தை வைத்து இந்த நாட்டில் சிந்தனை ரீதியில் குழப்பம் விளைவிக்க எண்ணுபவர்கள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதும், சர்வதேசத்திடம் முறையிடுவதுமாக இருக்கின்றார்கள்.
அது மாத்திரம் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அல்ல. உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புகின்ற மிகப் பிரதானமான பொறுப்பிற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். அதனை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்குண்டு என தெரிவித்துள்ளார்.






மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri