ரெலோ அமைப்பின் தலைவரை விடுதலைப் புலிகளே கொன்றனர் - செல்வம் அடைக்கலநாதன்
எமது ரெலோ அமைப்பின் தலைவர் சிறிசபாரத்தினத்தை தமிழீழ விடுதலைப் புலிகளே கொன்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடுக்கள் மனதிலிருந்தாலும் கூட தேசத்தின் விடுதலைக்காக இணைந்து பணியாற்றினோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் ஏற்கனவே பகிரங்கமாகவே சொல்லி வந்திருக்கின்றோம். அது ஒரு சகோதரப் படுகொலை. தமிழீழ விடுதலைப் புலிகள் தான் எமது ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரெத்தினத்தை கொலை செய்தார்கள்.
இது உலகறிந்த உண்மை. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு புதிதாகச் சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை.
நாங்கள் ஏற்கனவே அதனைச் சொல்லியிருக்கின்றோம். விடுதலைப் புலிகள் இருக்கின்ற போது கூட நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றோம்.
உண்மையை நாம் மறக்க முடியாது. இதனை நாம் வெட்ட வெளிச்சமாகச் சொல்லிக் கொள்கின்றோம்.
அப்படி இருந்தும், வடுக்கள் எமது மனங்களிலிருந்தாலும் கூட இந்த தேசத்தின் விடுதலைக்காக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றியும் இருந்தோம் எனத் தெரிவித்துள்ளார்.