ஊடகவியலாளர்கள் சீ.ஐ.டிக்கு அழைக்கப்பட்டமை பாரதூரமான நிலைமை - லக்ஷ்மன் கிரியெல்ல
ஐரோப்பிய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இலங்கையில் தங்கி இருக்கும் போது, ஊடகவியலாளர்கள் சிலரை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைத்தமை பாரதூரமான நிலைமை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாகத் தகவல் வெளியிட்ட எவரும் இதுவரை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்படவில்லை.
வெள்ளைப்பூண்டு மோசடி பற்றிய செய்தியை வெளியிட்டதன் காரணமாகவே ஊடகவியலாளர்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் வந்து, இலங்கையின் நிலைமையை நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள், சிவில் உரிமைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை ஆகியவற்றை நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் மூலம் இது தெளிவாகியுள்ளது.
எப்படியான பிரச்சினைகள் இருந்தாலும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இரத்துச் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் சாதகமான பதிலை வழங்கியது. நல்லாட்சி அரசாங்கம் அப்போது முன்வைத்த யோசனை குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஆச்சரியத்தை வெளியிட்டனர்.
19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றியை தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பின்னோக்கி திருப்பிவிட்டது எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.