வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 வீத நிதியே வழங்கப்பட்டது - சார்ள்ஸ் நிர்மலநாதன்
2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 வீத நிதி மட்டுமே இதுவரையில் வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்தச் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு கோவிட் வைரஸ் காரணமல்ல. நிதி அமைச்சின் தவறான கொள்கையும் வழிகாட்டலுமே பொருளாதாரம் வீழ்ச்சியடையக் காரணமாகியுள்ளது. ஆனால் கோவிட் வைரஸ் மீது பழி போடப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கட்டிட நிர்மாணத் தொழிலும் ஒப்பந்தக் காரர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிட நிர்மாணத்திற்குத் தேவையான பொருட்கள் 20 வீதம் முதல் 90 வீதம் வரை விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் வடக்கு மாகாண கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இன்றுவரை 20 வீத நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மிகுதி 80 வீதம் வழங்கப்படவில்லை. அதாவது வடக்கு மாகாண சபைக்கு இன்னும் 1,522 மில்லியன் ரூபா வழங்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்னும் ஒரு சில தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அந்த மிகுதி 1522 மில்லியன் ரூபாவையும் நிதி அமைச்சு வடக்கு மாகாண சபைக்கு வழங்குமா என்பது தொடர்பில் நிதி அமைச்சர் அறிவிக்க வேண்டும். அதே நேரம் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கு 126 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதுவும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri