சிங்கள மயமாக்கல் மற்றும் தமிழர்களின் நிலங்களை பறிக்கின்ற செயற்பாடு மும்முரம் - சாள்ஸ் நிர்மலநாதன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பினர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தாங்கள் பூர்வீகமாகத் தொடர்ச்சியாக விவசாயம் செய்து கொண்டிருக்கின்ற காணிகளை வனவள திணைக்களத்தினரும் ஒரு பௌத்த மதகுருவும் வந்து தங்களுடைய வேலைகளை உடனடியாக நிறுத்தும்படி கூறியதுடன் வேலை செய்துகொண்டு இருந்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கவனத்திற்கு அம்மக்கள் கொண்டு சென்றுள்ளனர்.
அது தொடர்பாக இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகையில்,
இங்கே இருக்கின்ற மக்கள் அவர்களுடைய ஒரே ஒரு வாழ்வாதாரமாக இந்த விவசாயத்தைத்தான் நம்பியே இருக்கின்றனர்.
தற்போது இலங்கை அரசாங்கமானது நாகர் காலத்துத் தமிழர்களின் வரலாற்று தொன்மையுடைய குருந்தூர் மலையை தனக்கு சொந்தமாக்கும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக குருந்தூர் மலை சூழ இருக்கின்ற தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரிக்கின்ற செயல்பாட்டை முன்னெடுத்து வருவதாகவே வனவள திணைக்களத்தின் மற்றும் பெளத்த மதகுருவின் நடவடிக்கை இருக்கிறது. இது தொடர்பாக வனவள திணைக்கள அமைச்சருடன் தொடர்பு கொள்ள முற்பட்டபோது அவர் தற்பொழுது வெளிநாடு சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை இது தொடர்பாகக் கேட்டபோது நில அளவை திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தற்பொழுது வயல் செய்கின்ற மக்கள் விவசாயம் செய்கின்ற நிலங்களை அளவீடு செய்து இரண்டு மூன்று தினங்களுக்குள் தன்னிடம் ஒப்படைக்கும்படி அதன் பிற்பாடு அவர் வனவள அமைச்சருக்கு ஒரு கடிதத்தை எழுதி எனக்கும் அதில் ஒரு பிரதி அனுப்புவதாகக் கூறியிருந்தார்.
உண்மையில் இந்த செயல்பாடு என்பது தற்போது நாட்டில் கோவிட் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்ற இந்த சூழ்நிலையில் சிங்களமயமாக்கல் தமிழர்களுடைய நிலங்களைப் பறிக்கின்ற செயல்பாடு மிகத் தீவிரமாகப் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நடைமுறை இன்னொரு வடிவம்தான் இந்த இந்த குருந்தூர்மலை தண்ணிமுறிப்பு விவசாய நிலங்களை பெளத்தமத குருவின் உதவியுடன் வனவள திணைக்களம் ஆக்கிரமிக்க நினைக்கும் செயல்பாடு.
இது முற்று முழுதாக எமது இனத்துக்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம். அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தில் இருக்கின்ற உயர்பதவிகளில் இருக்கின்ற அதிகாரிகள் அமைச்சர்கள் இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த செயல்பாட்டின் மூலமாக இங்கு இருக்கின்ற மக்களுடைய வாழ்வாதாரத்தை முற்று முழுதாக பாதிக்கப்படும்.
இது தொடர்பான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் இந்த மக்களைத் தொடர்ச்சியாக விவசாயம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.




