அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டங்களை பயன்படுத்தி எதிரிகளை அடக்குகின்றது – சம்பிக்க ரணவக்க
அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பயன்படுத்தி எதிரிகளை அடக்குமுறைக்கு உட்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பொய்களினால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் பொய்களினால் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் நீதியற்ற செயற்பாடுகளுக்கு நீதியான அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்களை அடக்கி ஒடுக்குவதற்கு அரசாங்கம் கோவிட் சட்டங்களைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சட்டவிரோத உண்டியல் முறைமையின் ஊடாகவே இன்று வெளிநாட்டுப் பணக் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நாடு பெரும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.