மே-18 ம் திகதி உலகத்தமிழினம் தமிழினப் படுகொலை நினைவு நாள் - லோகன் கணபதி
இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சியானது தமிழ்ச் சமூகத்தை மிலேச்சத்தனமான அடக்குமுறைக்குள் வைத்திருக்கவே முயல்கின்றது. அதன் சாட்சியமே முள்ளிவாய்க்கால் நினைவுக் கல்லை இலங்கை இராணுவம் காணாமலாக்கி நினைவு தூபியையும் இடித்து அழித்த நாகரிகமற்ற செயற்பாடு உறுதி செய்துள்ளது என கனடாவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
இச்செயற்பாட்டின் மூலம் தமிழ் மக்களைத் தாம் கண்ணீர் விடுவதற்குக் கூட ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்ற செய்தியைச் சர்வதேச சமூகத்துக்கு ராஜபக்சவினரின் இலங்கை அரசு மீண்டும் ஒருதடவை உரத்துக் கூறியுள்ளது.
மே-18 ம் திகதி உலகத்தமிழினம் தமிழினப் படுகொலை நினைவு நாளை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்கையில், தாயகத்தில் தமிழினப்படுகொலை நினைவு வாரத்தின் முதல் நாளான மே-12 ம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்களின் ஏக்கத்தை நினைவுகூர்ந்து அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இலங்கை இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக அடித்து உடைத்துள்ளமையும், தமிழர்களின் இன அழிப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்ட நினைவுக் கல்லைத் திருடர்கள்போன்று இரவோடு இரவாகக் காணாமல் ஆக்கியதும் மிகவும் கண்டிக்கத்தக்கச் செயலாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36/1 தீர்மானத்தின் நிலைமாறு கால ரீதியில் நினைவு கூறுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அச்சர்வதேச தீர்மானத்தை நிராகரித்து ஈழத்தில் தமிழர்களின் நினைவுகூரும் உரிமையை இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கிறதாயின், இது சர்வதேச நாடுகளையும் உதாசீனப்படுத்துகின்ற செயலாகவே காணப்படுகிறது.
எமது ஒன்ராறியோ சட்டமன்றம் நிறைவேற்றிய தமிழ் இனப்படுகொலை கல்விவார சட்டமானது, தாயகத்தில் நினைவுத்தூபி சிதைக்கப்பட்ட கடந்த மே-12 அன்று, துணை ஆளுநர் ஒப்பந்தத்துடன் சட்ட மூலமாக்கியமை ஈழத்தமிழர்களுக்கு ஆரோக்கியமான செய்தியேயாகும்.
நாம் என்றும் ஈழத்தமிழர்களுக்கான நீதிக்காகக் குரல் கொடுப்போம். சர்வதேச மனித உரிமை தீர்மானங்களை உதாசீனப்படுத்தும் இலங்கை அரசாங்கத்திற்குச் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
அவுஸ்திரேலிய நியூ சவுத்வேல்ஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியர் ஹக் மெக்டர்மொட், ஒன்டாரியோ மாநில சட்டசபையின் இனப்படுகொலை கல்வி வார சட்டத்தை சுட்டிக்காட்டி சர்வதேச சமூகம் தமிழினப்படுகொலையை அங்கீகரிப்பதில் பணியாற்ற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கும், இன்றுவரை இடம்பெற்றுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்து தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை ஈழத்தில் வாழச் சர்வதேச தரப்புகளாகிய நாம் ஒன்றிணைந்து குரல்கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.