ராஜபக்ச குடும்பத்தின் மூவர் மூன்று விதமான கருத்துகளைச் சொல்லியுள்ளார்கள்: இரா.சாணக்கியன்
நாங்கள் முப்படையை வைத்துக் கொண்டிருந்த காலம் போய் இன்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டே பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றோம்.
அவ்வாறு இருக்கையில் எமது பலம், பலவீனம் என்ன என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் வரலாறு காணாத அளவிற்கு மக்களின் எதிர்ப்பினை சந்தித்த அரசாங்கமொன்று செயலில் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் மிகமிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த அரசென்று சொன்னால் அது இதுவாகத்தான் இருக்கும்.
நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது மாநாட்டிலேயே இதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ராஜபக்ச குடும்பத்தின் மூவர் மூன்று விதமான கருத்துகளைச் சொல்லியிருந்தார்கள்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இந்த நாட்டின் மோசமான நிலைமை குறித்த உண்மையான கருத்தை இதன் போது வெளியிட்டிருந்தார். கடந்த காலங்களிலே தாங்கள் ஒரு தனிக்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் (Viyalenthiran) கட்சி என்பன மொட்டுவின் பங்காளிகள் என்பதை நேற்றையதினம் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இவை அனைத்தையும் தாண்டி நாங்கள் தற்போது மட்டக்களப்பின் நிலைமை குறித்துப் பார்த்தால், மட்டக்களப்பில் பசளை இல்லாமல் விவசாயிகள் மிகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது.
இவ்வாறு இருக்கையில் பொங்கலுக்குப் பின்னர் விவசாயிகள் மில்லியனர்களாகப் போவதாக அலட்சியமான கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
கேள்வி
அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகாந்தன் (Santhirakanthan) மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (Viyalenthiran) ஆகியோரின் நற்பெயர் கெடும் விதமாக நீங்கள் கருத்துகள் முன்வைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து?
பதில்
நான் உண்மையைச் சொல்வதால் அவர்களது நற்பெயர் கெட்டுப் போகின்றது என்று சொன்னால் அது அவர்களின் தவறான செயல்களால் ஏற்பட்டவையேயாகும். முதலில் நற்பெயர் இருந்திருக்க வேண்டும். இருக்கிறதும் இல்லாமல் போகிறது என்று சொன்னால் அவர்களின் செயற்பாடுகளே காரணம்.
இதைச் சொல்லி அவர்கள் ஆதங்கப்பட்டு, கவலைப்படாமல் அவர்கள் தங்கள் வழிகளைத் திருத்திக் கொண்டு மாற்றியமைப்பார்களாக இருந்தால் எவ்வித களங்கமும் வராது.
கேள்வி
நீங்கள் பிரச்சனைகள் தொடர்பில் கதைக்கின்றீர்களே தவிர அதற்கான தீர்வு தொடர்பில் கதைப்பதில்லை என்று பேசப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து?
பதில்
வழமையாகவே ஒரு நாட்டில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று சொன்னால் ஆளுங்கட்சியில் இருப்பவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. மாவட்ட அரசாங்க அதிபரிடம் வெளிநாட்டுத் தூதுவரிடம் சமர்ப்பிப்பதற்கு ஒரு செயற்திட்டம் தாருங்கள் என்றால் அரசியல் பிரச்சனை என்று சொல்லி அவர் பின்வாங்கும் நிலைமைகளே இருக்கின்றது.
அவ்வாறு ஒரு திட்டமொன்றே நிர்வாக ரீதியில் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலே மக்களுக்கான தீர்வை எவ்வாறு இவர்களிடம் கோருவது? மக்களுக்கான தீர்வை வழங்குபவர்கள் ஆளுங்கட்சியினர். அவர்கள் தானே அமைச்சுப் பதவியை வைத்திருக்கின்றார்கள், அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவியை வைத்திருக்கின்றவர்கள்.
அவர்கள் தான் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைக் கொடுக்க வேண்டியவர்கள். அவர்கள் உரிய தீர்வினைக் கொடுத்தாலும் கொடுக்காவிடினும் மக்கள் மத்தியில் நிலவும் அன்றாட பிரச்சனைகளை எடுத்துக் கூறுவது தான் எங்கள் பொறுப்பு. அவ்வாறு எடுத்துக் கூறியும் கண்டுகொள்ளாத நிலைமையே காணப்படுகின்றது.
இருப்பினும் திக்கோடை வைத்தியசாலை விடயம் தொடர்பில் நான் நாடாளுமன்றத்தில் வாய்மொழி மூல கேள்வி கேட்டதன் பிரகாரம் அங்கு சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அதே போன்று அண்மையில் மீன்பிடி அமைச்சர் களுவன்கேணியில் திறந்து வைத்த விடயம் நான் இவ்வாண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்திலே கேட்ட கேள்விக்கான விடையே அது.
அதேபோன்று பொலநறுவையில் இருந்து கடுகதி ரயில் சேவையைக் கொண்டு வருவது தொடர்பில் நான் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கதைத்த விடயம் இன்று காலையில் கடிதம் மூலம் பதில் கிடைத்திருக்கின்றது.
மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்தவும் நாங்கள் தேவை. அதனைத் தீர்த்து வைப்பதற்கும் நாங்கள் தான் தேவை என்று சொன்னால். அதற்கும் நாங்கள் தயார். நீங்கள் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்து விட்டு இருங்கள்.
எனக்கு எவ்வித பதவிகளும் தேவையில்லை, மாவட்ட நிர்வாக விடயங்களைக் கையாளும் அதிகாரத்தை எனது கையில் தாருங்கள் நான் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே மக்களுக்கான நல்லதொரு தீர்வினைக் கண்டு தருவேன்.
கேள்வி
தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக அழைத்துப் பேசுவது தொடர்பிலும் கருத்துக்கள் வருகின்றன. இது தொடர்பில் உங்கள் கருத்து?
பதில்
அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக அழைத்துப் பேசுவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டதாக நான் அறியவில்லை. ஆனால் ஐநா பொதுச் சபையிலே ஜனாதிபதி புலம்பெயர் அமைப்புகளுடன் பேசத் தயார் என்று சொல்லியிருந்தார்.
அதற்கு புலம்பெயர் அமைப்புகள் எங்களைத் தடை செய்து வைத்துக் கொண்டு எவ்வாறு எங்களுடன் பேசப் போகின்றீர்கள் என்று கேட்டிருந்தார்கள். அடுத்து வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புலம்பெயர்ந்த அமைப்புகளுடன் பேசுவதற்குத் தயார் இல்லை என்று சொல்லியிருந்தார்.
இந்த விடயத்தில் ஆளுக்கொரு கருத்தைச் சொல்லாமல் முதலில் ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் பேச வேண்டும். அவர்கள் புலம்பெயர் அமைப்புகளுடன் பேசுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
ஆனால் இலங்கையில் மக்கள் வாக்களித்த பிரதிநிதிகளின் முக்கிய கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதுவரை எவ்வித பேச்சுகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எங்களுடன் பேசுவதாகச் சொல்லிவிட்டு அதனை ஒத்திவைத்துள்ளார்கள்.
நாங்கள் ஜனாதிபதிக்கு எத்தனையோ கடிதங்கள் அனூப்பிருக்கின்றோம். தற்போது அவர் காலநிலை மாற்றம் பற்றிப் பேசுவதற்கு ஸ்கொட்லாந்து நாட்டில் இருக்கின்றார். இந்த நாட்டில் இனவழிப்பு போன்று சுற்றுச் சூழல் அழிப்பும் நடக்கின்றது என்ற குற்றச்சாட்டு கூட இருக்கின்றது.
ஏனெனில் எத்தனையோ காடழிப்பு, மண் அகழ்வு போன்ற விடயங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு இருக்கையில் இந்த இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் நான் எத்தனையோ கடிதங்கள் ஜனாதிபதியிடம் நேரடியாகவே அவரது கையிலும் கொண்டு கொடுத்திருந்தேன்.
வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் அரசியல்வாதிகளின் அடாவடித்தனத்தினால் தண்ணீர் வளம் இல்லாமல் போகின்றது. குடிநீர் இல்லாமல் போகின்றது என்பதையும் சொல்லியிருந்தேன். அதற்கும் இதுவரை பதில் இல்லை. புலம்பெயர் அமைப்புகளுடன் பேசுவது தொடர்பில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை.
ஆனால் இந்த நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும்.
கேள்வி
சர்வதேச நெருக்கடிகள் வரும் போது காலாகாலம் இலங்கை அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவோம். அவர்களுடன் பேசித் தீர்வைப் பெறுவோம் என்று சொல்லி வருகின்றார்கள். தற்போது ஜனாதிபதியின் அழைப்பை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? அவ்வாறு அழைத்தால் எந்த அடிப்படையில் நீங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது?
பதில்
தமிழ் மக்கள் எங்களுக்குத் தந்திருக்கும் மிக முக்கிய பொறுப்பு எமது மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதுதான் . அதே பொறுப்பை ஒரு பகுதியளவிலே சில சில கட்சிகளுக்கும் கொடுத்திருக்கின்றார்கள். மக்கள் வழங்கிய ஆசனங்களினூடாக மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ஆனால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்த்து ஏனைய கட்சிகள் மக்கள் தந்த சந்தர்ப்பத்தை வைத்துக் கொண்டு தங்கள் கட்சியை எவ்வாறு வளர்க்கலாம் என்ற நோக்கத்துடன் செயற்படுகின்றார்களே தவிர மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பது பற்றிச் செயற்படவில்லை.
எமக்குத் தீர்வு கிடைப்பதாக இருந்தால் இரண்டு வழிகள் இருக்கின்றது. ஒன்று இலங்கை அரசாங்கத்துடன் பேசி அனைத்து மக்களும் இணங்கி ஒரு தீர்வை அடைந்து எங்களுடைய அதியுச்ச அதிகாரப்பகிர்வுடனான தீர்வினை எட்டுவது. மற்றையது நடக்குமா நடக்காதா என்று தெரியாது.
1987ம் ஆண்டு இந்தியாவைப் போல ஒரு நாடு இலங்கைக்குள் வந்து ஒரு தீர்வினைப் பெற்றுத் தருவது. இதில் இரண்டாவது விடயத்திற்கான சாத்தியப்பாடுகள் எத்தகையது என்பது பற்றி இன்றைய நிலையைப் பொருத்து அனைவருக்கும் தெரியும்.
இந்தியா மாத்திரமல்ல எந்தவொரு நாடும் இன்னுமொரு நாட்டுக்குள் வந்து தீர்வைப் பெற்றுத் தருவதென்பது நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்வி இருக்கின்றது. அவ்வாறு இருக்கும் போது எந்த விடயத்திற்கும் முதலில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குப் போகவே வேண்டும்.
பேச்சுவார்த்தைக்குப் போகும் போது ஒரு சிலர் சொல்லலாம் இந்த விடயத்தை முன்வைத்துத் தான் பேச வேண்டும் என்று. ஆனால் பேச்சுவார்த்தைக்குப் போகும் போது நாங்கள் திறந்த நிலையிலேயே போக வேண்டும்.
எமது மக்களின் தீர்வுக்கு என் தேவை என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம். அதில் எவ்விதத்திலும் பின்வாங்கப் போவதில்லை. ஆனால் மக்களின் வாக்குகளைப் பெற்று தங்கள் கட்சிகளை வளர்ப்பவர்களின் நிலைப்பாடு வேறாக இருக்கின்றது.
பேச்சுவார்த்தைக்குப் போகக் கூடாது, பேசக் கூடாது, நிபந்தனைகளை வைத்து மாத்திரமே பேச வேண்டும் என்ற கருத்துகளும் வருகின்றன. எங்களிடமிருந்த மிகப் பெரிய பலம் இழக்கப்பட்டுள்ளதென்பதை நாங்கள் உணர வேண்டும்.
நாங்கள் முப்படையை வைத்துக் கொண்டிருந்த காலம் போய் இன்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டே பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றோம். அவ்வாறு இருக்கையில் எமது பலம், பலவீனம் என்ன என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும்.
அத்தோடு, பூகோள அரசியலில், அயல் நாடுகளுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவுகள் எவ்வாறு இருக்கின்றதென்பதையும் நாங்கள் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறான நெருக்கம் தமிழர்களுக்குப் பாதகமாக அமையுமா? சாதகமாக அமையுமா? என்பது தொடர்பிலும் நாங்கள் ஆராய வேண்டும்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும், தமிழர்களையும் இந்தியா எப்போதும் கைவிடாது. அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. விரைவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருக்கின்றது.
அது நாட்டிலா அல்லது இந்தியாவிற்குச் செல்வதா
என்பது தொடர்பில் அறிவிப்பார்கள்.
எக்காரணத்தைக் கொண்டும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கு எதிரான ஒரு
பேச்சுவார்த்தைக்கு நாங்கள் போக மாட்டோம் என தெரிவித்துள்ளார்.