அரசியல் தீர்வு பொதுவாக்கெடுப்பின் மூலமே காணப்பட வேண்டும்: - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கைத்தீவின் தமிழ்பேசும் அரசியல் தரப்புக்கள் ஒருமிக்க சக்தியாக ஒருங்கிணைவது வரவேற்கதக்கது.
ஆனால் தமிழர் தேசத்துக்கான அரசியல் தீர்வுத்திட்டம் என்பது பரிகாரநீதியின் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பு ஒன்றின் மூலமே காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் , தாயக தமிழர் அரசியல் தரப்புக்கள் இதனை நோக்கி செயற்படவே வேண்டுகிறோம் எனவும் தெரிவித்துள்ளது.
13வது திருத்தச்சட்டம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் கட்சிகள் இடையே இடம்பெற்றிருந்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர் தேசம் மிகப்பெரும் இன அழிப்பினை சந்தித்துள்ளது மட்டுமல்லாது, ஆக்கிரிமிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இச்சூழலில் ஈழத்தமிழர் தேசத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்ட தளத்தில் நின்றுகொண்டுதான் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து சிந்திக்க வேண்டும்.
2009, இனஅழிப்புக்கு முன்னராக முன்வைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்திலான அரசியல் தீர்வு, தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பாக அமையவில்லை என அன்றே தமிழர் அரசியல் தலைவர்கள் பலர் தெளிவாக குறிப்பிட்டுள்ளன.
இன்று 2009 இன அழிப்புக்கு பின்னராக முன்வைக்கப்படுகின்ற அரசியல்தீர்வு என்பது, முன்னரை போன்று இருக்க முடியாது.
காலாவதியாகிப்போன 13வது திருத்தச்சட்டத்தக்கு அப்பால் சென்று, 2009க்கு பின்னரான ஈழத்தமிழர் தேசத்தின் நிலைப்பாட்டுக்கு அமைய பரிகார நீதியின் அடிப்படையில் அரசியல் தீர்வுதிட்டம் அமையவேண்டும்.
தங்கள் தலைவிதியினை தாங்களே தீர்தமானிக்கின்ற வகையில், தாங்கள் எந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் வாழ வேண்டும் என்பதனை ஈழத்தமிழ் மக்களே தீர்மானிக்கின்ற வகையில் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
இன்றைய உலக ஒழுங்கில் இதுவே ஜனநாயக வழிமுறையாக காணப்படுகின்றது.
பரிகாரநீதியிலான அரசியல் தீர்வினைக்காண பொதுவாக்கெடுப்பு நோக்கிய செயற்பாட்டினை நோக்கி தாயக தமிழர் அரசியல் தரப்புக்கள் செயற்பட வேண்டும் என்பதே நாடுகடந்த தமிழீழ அரசின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, தமிழர் தேசத்தின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது என அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கருத்து தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




