அரசியலில் இருந்து ஓய்வுபெற தயாராகும் மற்றுமொரு ராஜபக்ச
ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அடுத்த சில வாரங்களில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அரசியலில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்திருந்தார்.
விலக போகும் ராஜபக்ச யார்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தவிர அமைச்சரவையில் ராஜபக்சவினர் எவரும் அங்கம் வகிக்கவில்லை. அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தில் சமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.