நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் விஷேட பொதுமன்னிப்பின் கீழ்
விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கடந்த 18/07/2023ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை "குரல் அற்றவர்களின் குரல் " அமைப்பினர் இன்று (20.07.2023) நேரில் சென்று
அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி, மருதநகரைச் சேர்ந்த 69வயதுடைய செல்லையா நவரட்ணம் மற்றும்
யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த 56 வயதுடைய சண்முகரட்ணம் சண்முகராஜா
ஆகியோரே இவ்வாறு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இருவருக்கெதிராகவும் கடந்த காலத்தில் பயங்கரவாத
தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது. எனினும்,
போர்ச்சூழல் காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்துத் தடையினால்
இவர்களால் மேல்நீதிமன்றில் முன்னிலையாக முடியாதிருந்தது.
அவ்வாறான நிலையில்,
பிரதிவாதிகளுக்குப் பதிலாக கதிரைகளை வைத்து வழக்கினை முன்னெடுத்திருந்த
மேல்நீதிமன்றமானது,
செல்லையா நவரட்ணம் என்பவருக்கு 200 ஆண்டுகால சிறைதண்டனையையும்
சண்முகரட்ணம் சண்முகராஜா என்பவருக்கு ஆயுற்கால சிறைதண்டனையையும் வழங்கித்
தீர்ப்பளித்து வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவந்திருந்தது.
விடுதலையின் அவசியம் குறித்து வலியுறுத்து

தமிழ் அரசியல் கைதிகளின் மறுகுரலாக ஒலித்துவருகின்ற குரலற்றவர்களின் குரல்
அமைப்பானது, பாதிக்கப்பட்ட இரண்டு தமிழ் அரசியல் கைதிகளினதும் நியாயப்பாடுகளை
விளக்கி இவர்களது விடுதலையின் அவசியத்தை
அனைத்துத் தரப்புகளுக்கும் எடுத்துச்சென்று தீர்வுக்கான வலியுறுத்தலை
மேற்கொண்டு வந்திருந்தது.
அந்தவகையில்,
இவர்கள் இருவரினதும் விடுதலை கூட்டுழைப்பின் பயனால் மெய்ப்பட்டுள்ளது.
கைதிகளின் விடுதலையை சாத்தியப்படுத்தியுள்ள ஜனாதிபதி அவர்களது நற்செயலை
குரலற்றவர்களின் குரல் அமைப்பு மனதார வரவேற்கின்றது.
அதேவேளை,
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில்
கூட்டுப் பொறுப்போடு கருமமாற்றி வருகின்றவர்கள் மற்றும் புலம்பெயர் தரப்புகளது
காலம் தாழ்த்தாத துரிதபணிகள், மீதமுள்ள 17 தமிழ் அரசியல் கைதிகளையும்
உயிர்ப்போடு சிறைமீளச் செய்வதற்கு உந்துசக்தியாக இருக்குமென்று நம்புகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
|