மீண்டும் சுதந்திரக்கட்சியில் இணைந்தார் மேர்வின் சில்வா
முன்னாள் அமைச்சரும் மேர்வின் சில்வா மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து, சுதந்திரக்கட்சியின் அங்கத்துவ அட்டையை பெற்றுக்கொண்டுள்ளார்.
மேர்வின் சில்வாவுடன் அவரது மனைவியும் முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றிருந்தார். மேர்வின் சில்வா ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்தார்.
பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து செயற்பட்டதுடன் முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் அரசாங்கங்களில் முக்கிய அமைச்சு பதவி வகித்தார்.
ராஜபக்சவினரை கடுமையாக விமர்சிக்கும் மேர்வின்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக இருந்த மேர்வின் சில்வாவுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் ரீதியான விரோதங்கள் காரணமாக 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மேர்வின் சில்வாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர், அவர் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டி
இவ்வாறான நிலையில், 2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்த அவர், அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட்டார்.
இதனையடுத்து கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அனுராபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட அனைவரும் தோல்வியடைந்தனர்.
இப்படியான பின்னணியில் மேர்வின் சில்வா தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணைந்துக்கொண்டுள்ளார்.
மேர்வின் சில்வா, மைத்திரிபால சிறிசேனவையும் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.