ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்:வெளிவரும் அரசியல் நகர்வுகள்
பல அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் தரப்புக்களை கோடிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.
வரவு செலவுத் திட்ட உரை

இதன்படி, வரவு செலவுத் திட்ட உரையின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் ஏறக்குறைய 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பிலும் மேலதிக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் வாசிப்பு

2023ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற
வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டாம் வாசிப்பின் ஆரம்ப உரையை
அன்றைய தினம் பிற்பகல் 1மணிக்கு ஆற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.