ரணில் அரசை காப்பாற்றி பசிலை தோற்கடிக்கும் அரசியல் முயற்சி
மக்கள் போராட்டம் காரணமாக பதவியை ராஜினாமா செய்த முன்னாள் நிதியமைச்சர் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலக்கு வைத்து பிரசார நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
22வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு ரணில் அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சி
அத்துடன் 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை பாதுகாக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு பதிலாக 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் அடங்கியுள்ள இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாட்டின் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுவதை தடுக்கும் சரத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பசில் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடுக்க 22வது திருத்தச்சட்டத்தை ஆதரிக்கும் அணிகள்
இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இல்லாமல் செய்வதற்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவ பல அரசியல் அணிகள் முன்வந்துள்ளன.
இந்த நிலையில், மக்களுக்கு சார்பான வரவு செலவுத்திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட மாட்டாது என ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
எனினும் இப்படியான வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்கும் இலக்குடன் சம்பந்தப்பட்ட அரசியல் அணிகள் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனடிப்படையில் பசில் ராஜபக்சவை தோற்கடித்து ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சிறியளவில் மாத்திரம் அதிகாரங்களை குறைப்பதற்கான ஏற்பாடுகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.



