யாழில் பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை
யாழ் குடாநாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 19 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போய் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரப் பகுதிகளில் நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்லும் பொழுது இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.
தமது மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் உரிமையாளர்கள் மிக அவதானத்துடன் செயல்படுவதுடன், மோட்டார் சைக்கிளின் பாதுகாப்பினை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
பொலிஸார் வேண்டுகோள்
குறிப்பாக கேண்டில் லொக்கினைப் (handle lock) பயன்படுத்திவிட்டு செல்லுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன், திருடப்படும் மோட்டார் சைக்கிள் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும், உதிரி பாகங்களாக மாற்றி விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஒரு சில கும்பல்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கும்பல் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு 021222 2222 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல் தெரிவிக்க முடியுமென பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
வழிப்பறி மற்றும் திருட்டு
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
துன்னாலை - குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த நபரிடம் இருந்து ஐந்து தண்ணீர் மோட்டார்களும் பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தொடர் மோட்டார் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன.
இவை தொடர்பில்
பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
போதைப்பொருளை நுகர்வதற்காகவே குறித்த இளைஞன் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் திருட்டுக்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக செய்திகள்: தீபன்