குறைப்பாடுகளை கூறி விசாரணைகளை இழுத்தடிக்க வேண்டாம்:றம்புக்கனை சம்பவம் தொடர்பில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு
விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது சம்பவம் தொடர்பாக சரியாக விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேகாலை நீதவான் வாசனா நவரத்ன, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் றம்புக்கனை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.
எரிபொருள் கிடைக்காதது சம்பநதமாக றம்புக்கனையில் நடைபெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸாருக்கு பிணை வழங்கினால், விசாரணைகளுக்கு தடையேற்படக் கூடும் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் எனக் கூறி, சந்தேக நபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் விசாரணைகளை நடத்தும் பலமிக்க நிறுவனமான குற்றவியல் விசாரணை திணைக்களம் தொடர்பாக மக்களுக்கு இருக்கும் கடும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் நீதவான் அறிவித்துள்ளார்.
எரிபொருளை கோரி, றம்புக்கனை கூட்டுறவு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டத்துடன் சம்பந்தப்படாத 41 வயதான சமிந்த லக்சான் என்ற இரண்டு பிள்ளைகளின் தநதை சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும் 13 பேர் காயமடைந்தனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.