பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
பாடசாலை மாணவர்களிடையே பரவும் போதைப்பொருள் குறித்து பொலிஸார் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
குறிப்பாக பாடசாலைகளில் ஐஸ் , முட்டாய், டொபி, பிஸ்கட் மற்றும் இனிப்புகளை பயன்படுத்தி மாவா மற்றும் பாபுல் விற்பனை செய்யும் முறை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுபோன்ற வணிகர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்றும், இது தொடர்பாக இதுவரை 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விஷ போதைப்பொருள் தொடர்பாக சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்றும், இந்த விடயத்தில் யாரும் தப்பமாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
மரண தண்டனை
அதன்படி, 5 கிராமுக்கு மேல் கொகேயின், ஐஸ் மற்றும் ஹெரோயின் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தங்கள் அன்புக்குரியவர்கள் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடுவதற்கு முன்பு, தங்கள் பகுதியில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சம்பவம் நடந்தால் அது குறித்த தகவல்களை வழங்குவது பொதுமக்களின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.