கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்
கிளிநொச்சி - பளை பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமும், வெடிகுண்டு தயாரிக்கும் ஆலையும் இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுக்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என இலங்கை பொலிஸ் நிராகரித்துள்ளது.
பளை பகுதியில் வனப்பகுதியை அழித்து மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு, அது விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாகவும், வெடிகுண்டுகள் தயாரிக்கும் மையமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒருவர் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றில் கூறியதை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
போர் பயிற்சி மையமாக இயக்கப்பட்டதற்கு
காணொளியில் காட்டப்பட்ட இடம், கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கீழ் வரும் அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குள், கண்ணகிபுரம் மேற்கு, முக்கம்பன் பகுதியில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டதாக பொலிஸாாார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளராலும், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவாலும் விசாரணைகள் தொடங்கப்பட்டன.
விசாரணையின் முடிவுகளின்படி, அந்த இடத்தில் வெடிபொருட்கள், சட்டவிரோதப் பொருட்கள் அல்லது குண்டுகள் தயாரிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அல்லது தீவிரவாத அமைப்பை ஊக்குவிக்கும் செயல்பாடுகளுக்கோ, அல்லது அந்த இடம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான போர் பயிற்சி மையமாக இயக்கப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சரிபார்க்கப்படாத தகவல்
இருப்பினும், அந்த இடத்தில் சட்டவிரோதமாக காடுகளை அழித்தல் மற்றும் சொத்துக்களை சட்டவிரோதமாகக் கையகப்படுத்துதல் தொடர்பான தகவல்களை இந்த விசாரணை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த விவகாரங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பரப்பியதாகக் கூறப்படும் நபர், ஆகஸ்ட் 18 அன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பொரலஸ்கமுவ, பெல்லன்விலவைச் சேர்ந்த 46 வயதான சந்தேக நபர், சரிபார்க்கப்படாத தகவலை ஒரு காணொளி மற்றும் ஊடக சந்திப்பின் மூலம் பரப்பியதாகக் கூறப்படுவதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் நேற்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, செப்டம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.
கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் தொடர்பில் போலி தகவல் பரப்பியவர் யார்....! பின்னணி குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4