தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களை கண்டறியும் நோக்கில் பொலிஸார் கொழும்பில் சோதனை
கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களைக் கண்டறியும் நோக்கில் பொலிஸார் கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
கொழும்பு நகரில் குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு தடுப்பூசியேனும் ஏற்றிக் கொள்ளாதவர்களை கண்டறியும் நோக்கில் இந்த தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட உள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களைக் கண்டுபிடித்து அவர்களை சுகததாச மைதானத்திற்கு அழைத்துச் சென்று தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதுவரையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் எவ்வித அச்சமும் கொள்ளாது உடன் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.