வவுனியா - ஓமந்தையி்ல் ஊடகவியலாளரை தாக்க முயன்ற பொலிஸ் அதிகாரியினால் குழப்பம்
வவுனியா - ஓமந்தையி்ல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர், செய்தி அறிக்கையிடலின் போது ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது ஓமந்தை, சின்ன விளாத்திக்குளம் பகுதியில் இன்று (20.09.2023) இடம்பெற்றுள்ளது.
அப்பகுதி குளத்தின் அருகில் கற்குவாரி அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஓமந்தை கமநல அபிவிருத்தி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரி
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயற்பட்டமையை ஊடகவியலாளர் ஒருவர் வீடியோபதிவு செய்துள்ளார்.
இதேவேளை குறித்த பொறுப்பதிகாரி ஊடகவியலாளர் வீடியோ பதிவு செய்த தொலைபேசியை தட்டி அச்சுறுத்தி தாக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு நின்ற ஏனைய ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் பொலிஸ் அதிகாரியுடன் முரண்பட்டதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் வவுனியா ஊடக அமையம் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |