கொரோனா தொடர்பான தகவல்களை மறைத்து செயற்பட்ட காவல்துறை அதிகாரி பணி இடைநீக்கம்
கொரோனா தொடர்பான தகவல்களை மறைத்து செயற்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றிய காவல்துறை அதிகாரியே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த காவல்துறை அதிகாரியின் மகன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.இந்த நிலையில் 2020 டிசம்பர் 30ஆம் திகதி அவர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
எனினும் இந்த விடயத்தை காவல்துறை அதிகாரிகள் தமது மேலதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.இதனையடுத்து அவரது மகனுக்கு கொரோனா கண்டறியப்பட்டமையை அடுத்து குறித்த காவல்துறை அதிகாரி ஜனவரி 2 ஆம் திகதி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இவர் தொற்றுக்கு உள்ளானமையை அடுத்து கேகாலை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் சோதனைகளின் போது சிரேஸ்ட அதிகாரி உட்பட 15 காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.