நாமலுக்கு எதிரான வழக்கில் போலி அறிக்கை சமர்ப்பித்த பொலிஸ் உயரதிகாரி
இந்தியாவின் தனியார் நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் பெற்ற விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கில் பொலிஸ் உயரதிகாரியொருவர் போலியான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றுக்கு காணித்துண்டொன்றைப் பெற்றுக் கொடுக்கும் விவகாரத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து நாமல் ராஜபக்ச பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக முறைப்பாடு ஒன்று எழுந்திருந்தது.
முறைப்பாடு
அதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் கடந்த நல்லாட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பொலிஸ் நிதி மோசடிப் பிரிவிற்கு ஜே.வி.பி.முக்கியஸ்தர் வசந்த சமரசிங்க முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.
எனினும், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் பணிப்பாளராக இருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார, நாமல் ராஜபக்சவையும் குறித்த தனியார் நிறுவனத்தையும் காப்பாற்றும் வகையில் 15 தடவைகள் போலியான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கம் பணியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட பின் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக இணைந்து கொண்டு இலட்சக்கணக்கில் சம்பளம் பெற்று வருகின்றார்.
விசாரணைகள்
குறித்த விடயங்கள் நேற்று கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் ஜே.வி.பி. முக்கியஸ்தர் சட்டத்தரணி சுனில் வடகலவினால் முன்வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |