யாழ்.குடத்தனையில் விசேட சுற்றிவளைப்பு: சந்தேக நபர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணம்- குடத்தனை கிழக்கு மாழிகைத்திடல் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது இன்று(18) அதிகாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இளைஞன் ஒருவன் பலர் மீது வாள் வெட்டு மேற்கொண்டு இதுவரை பலரை படுகாயப்படுத்தி வந்துள்ளார்.
வாள் வெட்டு
இந்தநிலையில் அவர் பல தடவைகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் பிணையில் விடுவிப்பதும் பிணையில் சென்ற பின் மீண்டும் வாளால் ஆட்களை வெட்டி காயப்படுத்துவதும் வழமையாக இடம் பெற்றுவருகிறது.
அண்மையில் பிணையில் சென்றிருந்த குறித்த இளைஞன் பல வீடுகளை தாக்கியும், பொருட்களை சேதப்படுத்தியும் வந்துள்ளதுடன் பலரை அச்சுறுத்தியும் வந்துள்ளதாகவும் ஒரு சில தினங்களுக்கு முன் வீதியால் சென்றுகொண்டிருந்த ஒருவரை சரமாரியாக வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளான்.
இந்நிலையில் சில நாட்களாக மருதங்கேணி பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கு முயன்றும் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.
இதனால் இன்று அதிகாலை இராணுவம் மற்றும் மருதங்கேணி பொலிஸார் இணைந்து குறித்த சந்தேக நபரை கைது செய்ய சென்றுள்ளனர்.
மக்கள் அச்சம்
இராணுவம் மற்றும் பொலிஸார் இன்று அதிகாலையில் சுற்றிவளைப்பு செய்யவுள்ளதை அறிந்துகொண்ட குறித்த சந்தேக நபர் தப்பித்துக் கொண்டதாகவும் மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த சந்தேக நபர் வாளுடன் தொடர்ச்சியாக உலாவித் திரிவதாகவும், இதனால் பாடசாலைக்கும் கல்வி நிலையங்களுக்கும் மாணவர்கள் செல்வதற்கு அச்சப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், சந்தேக நபருக்கு பயந்து ஆறு குடும்பங்கள் மாளிகைத்திடல் கிராமத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வாள் வெட்டு சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் குறுகிய காலத்தில பிணை வழங்குவதால் குறித்த சந்தேக நபர் தொடர்ச்சியாக இவ்வாறு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.



