பௌத்த பிக்குகளுக்கு விசேட அடையாள அட்டை அறிமுகம்
பௌத்த பிக்குகளை உரிய முறையில் அடையாளம் காணும் வகையில், அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு அடையாள அட்டையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறான ஓர் அடையாள அட்டையை அறிமுகம் செய்வது குறித்து பௌத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பௌத்த பிக்குத் தோற்றம் ஏற்று பௌத்த தர்மத்தை விகாரப்படுத்தும் செயல்கள் தற்போது சமூகத்தில் ஒரு கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளதாக, துணை அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூன்று பீடங்களைச் சேர்ந்த மகாநாயக தேரர்கள், முறையான பிக்குச் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுவது காலத்தின் அவசியம் என ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிக்கு வேடமிட்ட சில குழுக்கள் அல்லது தனிநபர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பிற வழிமுறைகளை பயன்படுத்தி பௌத்த தர்மத்தை விகாரப்படுத்துதல், கேலிக்குரியதாக மாற்றுதல், சமூகத்தில் தவறான புரிதல்களை உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புத்தசாசனத்தை பாதுகாக்கும் நோக்கில், மூன்று பீடங்களின் மகாநாயக தேரர்களின் அனுமதி மற்றும் ஆலோசனையுடன், அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் பிக்கு அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கமகெதர திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.