கைதான பெண் உயிரிழப்பு! வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்காலிகமாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பணிப்பெண்
பதுளை தெமோதர பகுதியை சேர்ந்த 41 வயதான பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த R.ராஜகுமாரி என்ற பெண் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், திடீரென நோய்வாய்ப்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பொலிஸ் பரிசோதகர், இரண்டு சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பொலிஸார் விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட மூன்று கான்ஸ்டபிள்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
குறித்த பெண் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக உள்ளக விசாரணையையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |