இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை: டக்ளஸ் தேவானந்தா உத்தரவு
இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் கடற்றொழிலாளர்
இலங்கையின் கடல் வளத்தினை அழிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அவை போதுமானளவு பலனளிக்காத நிலை காணப்படுகின்றது.
அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இந்தியத் தலைவர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் இந்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடனும் இவ்விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்திருந்ததுடன், விரைவில் புதுடெல்லி மற்றும் தமிழகத்தின் மேலும் பல உயர் மட்டத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுக்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறான சூழலில் இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறல்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளதுடன் பொலிஸாருக்கு தேவையான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவளை,காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனினால் யாழ்.இந்திய துணை தூதுவராலயத்திற்கு சென்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக மகஜரொன்று இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை
இதேவேளை பிரதேச கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில், முல்லைத்தீவு – தியோநகர் கடற்கரை பகுதியில் சுமார் 58 ஏக்கர் நிலப் பகுதியை தனியார் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பிரதேச மக்கள், குறித்த சட்ட விரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர், பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.
இதனிடையே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கீபி உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி-கஜிந்தன்

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
