பொலிஸாரின் தலையீட்டால் எரிபொருள் விநியோகத்தில் முறைகேடு: மக்கள் விசனம்(Photo)
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சில இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டு வருகின்றன.
வாகனத்தின் கடைசி இலக்கத்தினை கொண்டு ஒவ்வொரு தினங்களில் இவ்வாறு எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எரிபொருள் வழங்கப்படும் இடங்களில் மக்கள் முதல் தினமே வாகனங்களை வரிசையில் நிறுத்தி தமக்கான எரிபொருட்களை பெற்றுக்கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது.
பொலிஸாரின் நடவடிக்கை
இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் வழங்கப்படும் போது திடீர் என வருகை தரும் பெருமளவு பொலிஸார் தமக்கான எந்தவித ஒழுங்கு விதிகளுமின்றி எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முயலுவதனால் பொதுமக்கள் குழப்பமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதேவேளை மோட்டார் சைக்கிள்களுக்கு 1500 ரூபாவுக்கு எரிபொருள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் போது பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வரையறையில்லாமல் எரிபொருட்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பொதுமக்களின் கவலை
நீண்ட நேரமாக பொதுமக்கள் பெட்ரோல் வரிசையில் காத்திருக்கும் பொழுது பொலிஸார் வருகை தந்து பெட்ரோலை அதிகளவில் பெற்று செல்வதனால் சில வேளைகளில் பொதுமக்களுக்கு கிடைக்காத சந்தர்ப்பம் ஏற்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.