யுக்திய போதை ஒழிப்பு திட்டம்: வடக்கு கிழக்கில் திடீர் சோதனை
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் வாகனங்கள் மீது திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த சோதனை நடவடிக்கைகள், காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் நேற்றிரவு (13.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பொலிஸார், விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையில் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சோதனை நடவடிக்கைகள்
அதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடனும் மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுமார் ஆறு மணி நேரம் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு
இந்நிலையில், முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து மோப்ப நாய்கள் சகிதம் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவே ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை இன்றையதினம் (14.03.2024) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் விசேட அதிரடிப் படையினர் மோப்ப நாய் சகிதம் வீதியால் செல்லும் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - தவசீலன்