வணிக ரீதியான நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கும் பொலிஸ்
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவைத் தொடர்ந்து, வணிக ரீதியான நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறையை பொலிஸார் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்தத் தொகை அதிகாரிகளின் மேலதிக நேர வேலை மற்றும் படிகளை (Batta) ஈடுசெய்ய பயன்படுத்தப்படும் என்று பொலிஸ் பதில் பேச்சாளர் மினுர செனரத் தெரிவித்துள்ளார்.
இலவச பொலிஸ் பாதுகாப்பு
இருப்பினும், பொதுமக்களுக்கு இலவசமாக நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்து இலவசமாகவே வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த புதிய நடைமுறையின் முதற்கட்டமாக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திடம் (BMICH) இருந்து மாதந்தோறும் ரூ. 3.2 மில்லியன் செலுத்தும்படி பொலிஸ் கோரியுள்ளது.
மிக முக்கியமான பிரமுகர்கள் (VVIP) கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்காக அங்கு நிரந்தரமாக கடமையில் உள்ள 262 பொலிஸ் அதிகாரிகளுக்காக இந்தக் கட்டணம் கோரப்பட்டுள்ளது.
திடீரென விலக்கப்பட்ட பாதுகாப்பு
அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறைவடைந்த புத்தகக் கண்காட்சியின் போது, நிர்வாகமோ அல்லது ஏற்பாட்டாளர்களோ கட்டணம் செலுத்தாததால், பொலிஸ் பாதுகாப்பு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக, சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் மிக முக்கியமான பிரமுகர்கள் கலந்து கொண்ட போதிலும், கண்காட்சியின் பெரும்பகுதி பொலிஸ் பாதுகாப்பு இன்றி நடத்தப்பட்டது.
இதற்கிடையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட பல அமைச்சர்கள் கண்காட்சிக்கு வருகை தந்த நிலையில், 56 பேர் கொண்ட பொலிஸ் பாதுகாப்பு பிரிவு திடீரென விலக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தக் கோரி அரசாங்கத்தை ஆதரிக்கும் தொழிற்சங்கமொன்று கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
