முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்திய பொலிஸார் (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் ஒன்றான ஒதியமலையில் இடம்பெற்ற படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுசுட்டான் பொலிஸார் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.
ஒதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று (02.11.2023) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் ஒன்றான ஒதியமலை பகுதியில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த இராணுவத்தினாலும், சிங்கள மக்களாலும் ,அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்கள் சனசமூக நிலையத்திற்கு வரவழைத்துவிட்டு அவர்களது ஆடைகளை களைந்து அவற்றினால் அவர்களை கட்டி 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேர் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாகவ அவர்களின் உறவினர்கள் கருதுகின்றனர்.
குறித்த ஒதியமலைப் படுகொலையின் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஒதியமலை சனசமூகநிலைய வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
இதன்போது அமைதியாக முறையில் நிகழ்வுகள் இடம்பெற்று கொண்டிருந்தபோது திடீரென நுழைந்த ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஒலிபெருக்கி பாவிப்பதற்கான அனுமதி பத்திரம் பெறவில்லை என தெரிவித்து நிகழ்வில் குழப்பத்தை விளைவித்துள்ளனர்.
பொலிஸாருடன் மக்கள் வாக்குவாதம்
நிகழ்வின் இடையில் புகுந்த ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஒலிபெருக்கான அனுமதி பத்திரத்தை காண்பிக்குமாறும் நிகழ்வை நிறுத்துமாறும் கூறியுள்ளனர். இதன்போது அந்த இடத்தில் பாரிய குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கோடு திட்டமிட்டு செயற்பட்டதாக அங்கிருந்த மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தாங்கள் நிகழ்வை மேற்கொள்வதாகவும் எந்த பொலிஸாரும் குழப்பத்தை விளைவிக்கவில்லை என்றும் நிகழ்வு இடம்பெற்ற நிலையில் திட்டமிட்டு நீங்கள் குழப்புவதாகவும் தெரிவித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர் பத்து நிமிடங்களில் நிகழ்வை நிறைவு செய்யுமாறு பொலிஸார் கூறிச் சென்றதையடுத்து நிகழ்வு இடைநடுவில் நிறைவு பெற்றுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |