பாரிய தங்க மோசடியில் ஈடுபட்ட நபர்.. பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
தங்க மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
களனி, லூயிஸ் மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் தங்க ஆபரணங்களை வாங்க பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு சரியான தங்க ஆபரணத்தை வழங்காமல் இருந்ததாக கூறி, கடந்த பெப்ரவரி 11, 2025 அன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியது.
தங்க நகை மோசடி
சந்தேக நபர் 3½ கிலோ கிராம் தங்கத்தை வழங்குவதாகக் கூறி, ரூபா 5 கோடியைப் பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் தங்கத்தால் பூசப்பட்ட இரண்டு இரும்புத் துண்டுகளைக் கொடுத்து தன்னை ஏமாற்றியதாகவும் குறித்த நபர் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

இதன்படி, சந்தேகநபர் 198621302653 என்ற தேசிய அடையாள இலக்கத்துடன் குருநாகல் வில்பாவ 11வது லேன் 341 இல் வசிக்கும் லொகுபடதுருகே மகேஷ் விந்தக டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் அழைப்பு
போலியான அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி இலங்கை கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டர் என்று தன்னை தெரிவித்து கொண்டு, மக்களை ஏமாற்றி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கடந்த டிசம்பர் 23, 2525 அன்று சந்தேக நபரை CID கைது செய்து, மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இன்று வரை மோசடி செய்தவர் மீது இரண்டு முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், அவர் இதே போன்ற குற்றங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து மேலும் தகவல்களைச் சேகரிக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, இது தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் 03-011-2395371 அல்லது 03- 071-8594915 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.