பொலிஸ் உத்தியோகத்தர் செய்த தவறான காரியம்: விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் நடவடிக்கை
கேரளா கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (01.06.2023) முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை - அனுராதபுர சந்தியில் இருந்து முச்சக்கர வண்டியில் கேரளா கஞ்சா பொதியை ஏற்றிக்கொண்டு செல்லும்போது 96ஆம் கட்டை பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் வைத்துக் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முள்ளிப்பொத்தானை- 10ஆம் கொலனியில் வசித்து வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் முத்தலிப் மாஜித் (54 வயது) என கூறப்படுகின்றது.
தடுத்து வைத்து விசாரணை
குறித்த பொலிஸ் தன்னுடைய நண்பர் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து அனுராதபுர சந்தியின் பார்சல் ஒன்று இருப்பதாகக் கூறியதாகவும் இதனை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டிகள் செல்லும் போது தன்னை கைது செய்ததாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அக்போபுர பொலிஸ் அதிரடிப் படையினருக்குக் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த நபரிடம் கஞ்சாவை விற்பனைக்காகப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் விசேட பொலிஸ் அதிரடிப் படையினரின் தகவல் வழங்குநர்கள் ஊடாக கஞ்சா போதைப் பொருளைப் பெற்றுக்கொள்ளும்போதே குறித்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்திடம் ஒரு கிலோ பத்து கிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபரை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |