எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் பொதுமக்களுக்கிடையே முறுகல் நிலை(Photos)
வவுனியா - மன்னார் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச ஊழியர்களிற்கும், பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நகரசபை உறுப்பினர் பாரி என்பவரையும், அரச உத்தியோகத்தர் ஒருவரையுமே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா - மன்னார் வீதி நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்று கொள்வதற்காக கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவு பகல் பாராது அரச உத்தியோகத்தர்கள் ஒரு வரிசையிலும், பொதுமக்கள் ஒரு வரிசையிலும் காத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பொலிஸார் தமக்கான புதிய வரிசையினை உருவாக்கி எரிபொருளினை பெறும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு அதிகளவில் முன்னுரிமை
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கும் போது பொலிஸாருக்கு அதிகளவில் விசேட முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளினை பெற்று செல்வதனால் தங்களிற்கான எரிபொருளினை பெறுவதற்கு பல நாட்களிற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் தங்களிற்கான எரிபொருளினை பெற்ற பின்னரே அரச ஊழியர்கள் பெற முடியும் என தெரிவித்தமையால் அரச ஊழியர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல்
நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வினவியபோதே நகரசபை உறுப்பினரையும், அரச உத்தியோகத்தரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குழப்ப நிலை முடிவு
இதனால் அப்பகுதியில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் இரு பொலிஸாருக்கு, இரு அரச ஊழியர்களுக்கு என்ற ரீதியில் எரிபொருளினை வழங்க பொலிஸார் உடன் பட்டதன் பின்னரே குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.



