பொதுமக்கள் பாதுகாப்பினை பொலிஸாரினால் பாதுகாப்புப் மட்டும் உறுதி செய்ய முடியாது
ஒரு நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு என்பது வெறும் பொலிஸாரோ அல்லது முப்படையினரோ மட்டுமே முன்னெடுக்கக்கூடிய ஒன்று அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கு அரச அதிகாரிகள், அரசியல் அதிகாரம் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரதும் தீவிர பங்களிப்பு அவசியம் என என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் மையப்படுத்தப்பட்ட, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் ஒரு அரசை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சமூகத்தில் காணப்படும் முக்கிய சவால்களை எதிர்கொள்ள அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பினரின் ஒருங்கிணைந்த தலையீடு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பாடசாலைச் சூழலில் எழும் சவால்கள் என பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியின் கீழ் சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே நடைமுறைப்படுத்தப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அல்லது உயர் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் எவருக்கும் எவ்வித சிறப்புச் சலுகையும் கிடையாது எனக் கூறியுள்ளார்.
மேலும், குற்றமிழைத்துச் சட்டத்திலிருந்து தப்பித்து வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள நபர்களுக்கு எதிராகவும் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்குப் பாதுகாப்புப் படையினரும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளும் தீவிரக் கவனத்துடன் செயற்பட்டு வருவதாகவும் நிலாந்தி கொட்டாச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.