பொலிஸ் அதிகாரிகளின் பெயரில் மோசடி: முறைப்பாடு அளிக்க விசேட எண்கள்!
பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, போலி பொலிஸ் அதிகாரிகளாக நடித்து சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குப் பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பு அதிகாரிகளின் பின்வரும் எண்களுக்குத் தொடர்புகொண்டு இது தொடர்பான முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
• 071 - 8592918
• 071 - 8591765
• 011 - 2300756

இவ்வாறான மோசடிகள் குறித்து ஏற்கனவே பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், பொதுமக்கள் மீண்டும் மீண்டும் இந்த மோசடிகளில் சிக்கி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கணினிகள் அல்லது கைபேசிகளைப் பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகளின் படங்களுடன் போலி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளை உருவாக்கி இந்த மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்காகவும் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதில்லை எனவும், இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து மேற்கண்ட தொலைபேசி எண்களுக்கு மேலதிகமாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.