சுரங்கப் பாதையைப் பயன்படுத்தாத பாதசாரிகள் மீது பொலிஸார் கடும் நடவடிக்கை
சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தாமல் பிரதான வீதிகளை சட்டவிரோதமாகக் கடக்கும் பாதசாரிகள் மீது சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்த கண்டி பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
கண்டி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கட்டப்பட்ட கீழ்ப்பாலங்களைப் பயன்படுத்தாமல் ஆபத்தான முறையில் வீதிகளைக் கடப்பது ஒரு தீவிரப் பிரச்சனையாக மாறியுள்ளது என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விசேட பொலிஸ் குழு
நகருக்கு வரும் மக்களின் பாதுகாப்பிற்காக பெரும் செலவில் சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டிருந்த போதிலும், சிலர் அவற்றைத் தவிர்ப்பதால், வீதிவிபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சட்டவிரோதமாகச் வீதிகளைக் கடப்பவர்கள் மீது, அவர்களின் தராதரத்தைப் பொருட்படுத்தாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டி பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
அதன்படி, பாதசாரிகள் கடக்கும் இடங்கள் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கு அருகில் விசேட பொலிஸ் குழுக்களைப் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்தை மீறுபவர்கள் மீது அபராதம் விதிப்பது உட்பட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டி பொலிஸார் தொடர்ந்தும் எச்சரித்துள்ளனர்.