பொரளை மெகசின் சிறைச்சாலையில் பதற்றநிலை..! சிக்கிய மர்மப்பொதி - பின்னணியில் வெளியான காரணம்
பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து, சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட ஒரு சிறிய பொதியை சிறை அதிகாரி ஒருவர் கைப்பற்றிய பின்னர், கைதிகள் குழுவொன்று அமைதியின்மையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளியான காரணம்
சிறைச்சாலையின் 'ஈ' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று, இரவு 10:20 மணியளவில் திடீரென அந்தப்பிரவில் இருந்து வெளியேறி, கலவரத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, 40க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரு சிறை அறையின் பூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி, அவர்களை மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சுமார் பத்து கைதிகளை ஏனைய சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இதற்கிடையில், சிறை வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படைகளின் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறையில் ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகலே இந்த மோதலுக்கும் பதற்ற நிலைமைக்கும் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.