வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டதாக குற்றச்சாட்டு (Video)
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடலுக்கு பயணித்த வாகனத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்தியதாகவும், உடற்பாகங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களான கண்டுமணி லவகுசராசா, அழகுராசா மதன் ஆகியோர் பயணித்த வாகனமே நேற்றிரவு (19.07.2023) 10:30 மணியளவில் ஹபரன -கல்ஓயா சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முறையற்ற விதத்தில் பொலிஸார் செயற்பாடு
இச்சோதனையின் போது எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்டபோது சுவிஸ் தூதுவரை சந்திப்பதற்காக கொழும்புக்கு கூட்டம் ஒன்றிற்கு செல்வதாக கூறியதன் பிற்பாடு முறையற்ற விதத்தில் உடற்பாகங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டதுடன், பணப்பை கைப்பற்றப்பட்டு முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னர் வழங்கப்பட்டதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.
இதனையடுத்து திருகோணமலை மாவட்ட பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பொலிஸார் தம்மை அச்சுறுத்தும் நோக்குடன் செயல்பட்டதாக உணர்வதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.