பருத்தித்துறை பிரதேசசபை அமர்வில் சலசலப்பு : ஒன்பது உறுப்பினர்களுடன் நடைபெற்ற அமர்வு
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த கூட்ட அறிக்கையில் திருத்தம் செய்யப்படாமையை காரணம் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சபை கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) காலை 9.45 மணியளவில் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் ஆரம்பமானது.
இதன் போது கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்ட நிலையில் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யவேண்டும் என்றும், சில விடயங்கள் சேர்க்கவேண்டும் என்றும் எதிர்த்தரப்பை உறுப்பினர்கள் வாதிட்டுக்கொண்டிருந்த நிலையில் தவிசாளரால் தனது கட்சி உறுப்பினர்கள் முன்மொழிவு வழிமொழிவுடன் கூட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெளிநடப்பு செய்த பத்து உறுப்பினர்களும்
அவ்வாறு ஏதும் செய்யமுடியாது என்றும், தவிசாளருக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் கூட்ட அறிக்கையை நிறைவேற்ற முடியும் என்று தவிசாளர் தெரிவித்த நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (சங்கு) 4 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் இருவருமாக 10 உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த போதிலும் ஆட்சியிலுள்ள தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் 8 பேரும் ஈபிடிபி உறுப்பினர் ஒருவருடனும் சபை அமர்வு தொடர்ந்து இரண்டு மணிவரை இடம்பெற்றது.
அதிருப்தி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துகொண்டிருந்தபோது சபை அமர்வில் கலந்து கொள்ள இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் அமர்வில் பத்தாவது உறுப்பினராக கலந்துகொண்டார்.
சபை அமர்வு பத்து உறுப்பினர்களுடன் தொடர்ந்து நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சபை அமர்வின் முடிவில் சபையை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் குழப்பிச் சென்றதாகவும், சபைக்கு முரணான விடயங்களை அறிக்கையில் சேர்க்குமாறு வற்புறுத்தியதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.
இதேவேளை வெளிநடப்பு செய்த பத்து உறுப்பினர்களும் தமது உரிமை மறுக்கப்படுவதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



