எதிர்க்கட்சியில் இணைய தயாராகும் பொதுஜன பெரமுன எம்.பிக்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இவர்களில் ஒருவர் பொதுஜன பெரமுனவின் மாவடட தலைவர் என்பதுடன் அவர் அமைச்சராகவும் பதவி வகித்தவர் எனவும் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி
அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக அதிருப்தியடைந்திருப்பதால், இவர்கள் எதிர்க்கட்சியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக பேசப்படுகிறது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை அரசாங்கத்தில் எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பல்வேறு காரணங்களால் அதிருப்தியடைந்து, இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்துக்கொண்டனர்.
ஏற்கனவே எதிரணியில் இணைந்த பொதுஜன பெரமுன எம்.பிக்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் ஒரு அணியும், அனுர யாப்பா பிரியதர்ஷன தலைமையில் ஒரு அணியும் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.
இவர்களை தவிர பொதுஜன பெரமுனவின் கூட்டணிக்கட்சிகள் விமல் வீரவங்ச தலைமையில் தனித்து செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



