கோர விபத்தில் பாடசாலை மாணவி பலி
கம்பஹா, மீரிகம தேசிய பாடசாலைக்கு அருகில், எரிவாயு ஏற்றிச் சென்ற வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.
மீரிகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று மதியம் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவி நவகமுவ, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷானி ஷனயா எனவும் மீரிகம டி.எஸ். சேனநாயக்க தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பு படிக்கும் மாணவி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தூக்கி வீசப்பட்ட மாணவி
பாடசாலை முடிந்ததும் பிரதான வீதிக்கு வந்த பாடசாலை மாணவி, மீரிகம நோக்கி பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.
ஓட்டுநர் மோட்டார் சைக்கிளை இயக்கி பஸ்யால நோக்கி திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு கொண்டு செல்லும் வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவி அதன் சக்கரங்களில் ஒன்றில் சிக்கியுள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் காயமின்றி தப்பியதாகவும், காயமடைந்த மாணவி மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



