அமைச்சு பதவி கேட்கும் மொட்டு எம்.பிக்களுக்கு ரணில் பதிலடி
மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகளை வழங்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பிரதிநிதி ஒருவரிடம் தெரிவித்துள்ளதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானது முதல் மொட்டுக் கட்சி எம்பிக்கள் 10 பேர் அமைச்சுப் பதவிகள் கேட்டு போராடி வருகின்றனர்.
இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அந்த 10 பேரும் ஒரு வருடத்தைக் கடந்த போதிலும், அமைச்சுப் பதவிகளுக்கான போராட்டத்தை இன்னும் கைவிடவில்லை.
குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை
கடந்த வாரம் அந்த 10 பேரில் ஒருவரான நாமல் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதிநிதி ஒருவரைச் சந்தித்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான போராட்டத்தைத் தாம் கைவிடவில்லை என்றும் தமக்கு அமைச்சுப் பதவிகள் வழங்காவிட்டால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி குறித்த பிரதிநிதியால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
"மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள அவர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை" என்று தனது பிரதிநிதியிடம் ஜனாதிபதி பதிலளித்துள்ளார் என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |